தினத்தந்தி 07.11.2013
தாம்பரம் சானடோரியத்தில் ரூ.5 கோடியில் புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்ட
புதிய பஸ் நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து
வைத்தார்.
புதிய பஸ் நிலையம்
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் 3.77 ஏக்கர் இடத்தில் ரூ.4
கோடியே 95 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. புதிய பஸ்
நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து
வைத்தார்.
தாம்பரம் சானடோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட
கலெக்டர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். பயனாளிகள் 3 பேரும் பேசினர்.
விழாவில் தாம்பரம் நகராட்சி தலைவர் ம.கரிகாலன், ஆணையாளர் சிவசுப்பிரமணியன்,
பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
106 பஸ்கள்
இந்த புதிய பஸ் நிலையத்தில், தாம்பரத்தில் இருந்து சென்னை செல்லும்
அனைத்து மாநகர பஸ்களும் நின்று செல்லும். காஞ்சீபுரம், வாலாஜாபாத்,
ஸ்ரீபெரும்புதூர் செல்லும் அரசு பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து
புறப்பட்டு செல்லும். இந்த புதிய பஸ் நிலையத்தில் 30 கடைகள், ஓட்டல்கள்,
பயணிகள் ஓய்வு இடம், 18 பஸ்கள் நிற்கும் வசதியுடன் பாதை ஆகியவையும்
அமைக்கப்பட்டு உள்ளன.
பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கீழ்கண்ட பஸ்கள் இனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
காஞ்சீபுரம்(வழிதடம் எண் 79), ஸ்ரீபெரும்புதூர்(வழிதடம் 583),
பேரம்பாக்கம்(வழிதடம் 583டி, 583பி), போந்தூர்(வழிதடம் 583பி),
எழிச்சூர்(வழிதடம் 55பி), மேட்டுப்பாளையம் 9(வழிதடம் 55எஸ்),
குருவன்மேடு(வழிதடம் 55 எம்), ஸ்ரீபெரும்புதூர்(வழிதடம் 55 என்),
வல்லக்கோட்டை(வழிதடம் 55எல், 55ஏ), வாலாஜாபாத்(வழிதடம் 579ஏ),
வேலூர்(வழிதடம் 155), ஆரணி(வழிதடம் 279), சித்தூர்(வழிதடம் 168),
பெங்களூர்(வழிதடம் 144).
