மாலை மலர் 29.07.2010
செப்டம்பர் மாதம் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்
சென்னை, ஜூலை.29- சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் 1983-ம் ஆண்டு போடப்பட்டது. இதன்படி ஆந்திர அரசு சென்னைக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையும் மொத்தம் 7.016 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளது. ஒப்பந்தப்படி ஜீலை மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.
ஆனால் தாமதம் ஏற்பட்டது. எனவே தமிழக அதிகாரிகள் ஆந்திரா சென்று, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வற்புறுத்தினார்கள். ஆகஸ்டு மாதத்திலாவது திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதற்கு ஆந்திர அதிகாரிகள், “கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே செப்டம்பரில் தண்ணீர் திறக்கப்படும்” என்று தெரிவித்தனர். தற்போது கண்டலேறு அணையில் 18.35 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. எனவே கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும் கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இன்றைய நிலவரப்படி, பூண்டி ஏரியில் 1077 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 1367 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 1666 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 140 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள் ளது. வீராணம் ஏரியில் 343 மில்லியன் கன அடி இருக்கிறது.
சென்னைக்கு தற்போது தினமும் 660 மில்லியன் லிட்டர் குடிநீர் “சப்ளை” செய்யப்படுகிறது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.