தினகரன் 08.11.2010
தீபாவளிக்கு குவிந்த 1000 டன் குப்பை தேக்கம் 4 நாளாக அகற்றப்படாததால் ஆறு, ஓடைகளில் கொட்டியதால் துர்நாற்றம்
மதுரை, நவ. 8: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாளாக குப்பை அள்ளப்படாததால் மதுரை நகரில் ஆயிரம் டன் குப்பை தேக்கமடைந்துள்ளது. இறைச்சிக்காக 10 ஆயிரம் ஆடுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அறுக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகள் வைகை ஆறு, கால்வாய்கள், ஓடைகளில் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
மதுரை மாநகராட்சி எல்லைக்குள் தினமும் 400 முதல் 450 டன் குப்பை அள்ளப்பட்டு, அவனியாபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகள், அட்டை டப்பாக்கள், இனிப்பு பலகார கடை கழிவுகள் குவியல் குவியலாக தெருக்களில் கிடக்கின்றன. வீடுகளில் இருந்து கொட்டப்பட்ட குப்பைகள் மாநகராட்சி குப்பை தொட்டிகளில் நிரம்பி வெளியே சிதறி கிடக்கின்றன.
தீபாவளி விடுமுறையில் 10 ஆயிரம் ஆடுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் மாடு, பன்றிகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது தவிர மீன்களும் விற்பனை ஆகி உள்ளன.
இவற்றின் கழிவுகள் வைகை ஆறு, கிருதுமால்நதி, அனுப்பானடி, சிந்தாமணி உள்ளிட்ட 11 கால்வாய்கள், ஓடைகள், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் பின்பகுதி, பூ மார்க்கெட் எதிரே உள்ள ஓடை உள்ளிட்ட இடங்களில் கொட்டப்பட்டுள்ளன. புதூர் கற்பகநகர் அருகிலுள்ள மாநகராட்சி மயானத்திலும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.
தீபாவளியை முன்னிட்டு நேற்று வரை விடுமுறை என்பதால், மதுரை நகரில் மாநகராட்சி மூலம் குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பை பல பகுதிகளில் குவிந்து கிடக்கிறது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 700 பேர் உள்ளனர்.
திங்கள்கிழமை (இன்று) முதல் 3 ஷிப்ட் முறையில் துரிதமாக குப்பைகள் அகற்றும் பணி நடைபெறும்” என்றார்.
இறைச்சி விலை எகிறியது தீபாவளியை முன்னிட்டு இறைச்சி விலை எகிறியது. கிலோ ரூ260 முதல் 280 ஆக இருந்த ஆட்டுக்கறி ரூ300 முதல் 320 ஆகவும், ரூ90&க்கு விற்ற பிராய்லர் கோழி ரூ160 வரையிலும் ஏறியது. ரூ160&க்கு விற்ற நாட்டுக் கோழி ரூ220 முதல் 250 ஆக பறந்தது. வான்கோழிக்கறி ரூ400&க்கு விற்றது. இது தவிர மாடு, பன்றி, காடைகளும் விற்பனை ஆயின. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்தும் ஆட்டு இறைச்சியில் கலப்படம் அதிகம் இருந்தது.