மாநகராட்சியின் ஐந்தாவது மேயரானார் ப.ராஜ்குமார்
கோவை மாநகராட்சியின் ஐந்தாவது மேயராக ப.ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கோவை மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் ப.ராஜ்குமார் 2,91,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் கோவை மாநகராட்சியின் ஐந்தாவது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செ.ம.வேலுசாமி 2,81,728 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக மேயர் வேட்பாளர் நா.கார்த்திக் 1,53,816 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சுமார் 1,27,912 வாக்குகள் வித்தியாசத்தில் செ.ம.வேலுசாமி வெற்றி பெற்றார்.
இதனிடையே செ.ம.வேலுசாமியின் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மே மாதம் மேயர் பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து நடந்த மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் வெற்றி பெற்று, ஐந்தாவது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மேயர்கள்: கோவை மாநகராட்சியின் முதல் மேயராக வி.கோபாலகிருஷ்ணன் (த.மா.கா), 1996ல் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து தா.மலரவன் (அதிமுக), ஆர்.வெங்கடாசலம் (காங்கிரஸ்), செ.ம.வேலுசாமி (அதிமுக) ஆகியோர் மேயர் பொறுப்பு வகித்தனர். மேயர் பதவியை அதிமுகவே மூன்று முறை வென்றுள்ளது.