தினமலர் 27.03.2010
கட்டி முடித்த கட்டடங்களில் பூட்டு புதுசெல்லாம் பழசாகுது: வெட்டியாகுது மாநகராட்சி சொத்து
செம்மொழி மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடக்கும் நிலையில், ஏற்கனவே நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நகரில் உருவான பல புதிய கட்டடங்கள், திறக்கப்படாமலே பழமையாகி வருகின்றன.கோவை மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் வேகம் பெற்றுள்ளன. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப்பணிகள் நடக்கின்றன. இதே திட்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான பணிகளும், நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரும் ‘பி.எஸ்.யு.பி.,’ திட்டத்தில் வீடுகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. செம்மொழி மாநாட்டுப் பணிகளும் சேர்ந்து விட்டன.
113 கோடி ரூபாய் மதிப்பில் அணுகுசாலைகள், திட்டச்சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் உட்பட ஏராளமான பணிகள் நடக்கின்றன. இதற்கு முன், மாநகராட்சி நிதியைச் செலவழித்து பல கோடி ரூபாய் மதிப்பில் செய்த பணிகள் இன்னும் முடியாமல் நிற்கின்றன.கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் தலைவர் பைந்தமிழ்பாரி. இவருக்காகவே இரண்டு கோடி ரூபாயில் புதிய மண்டல அலுவலகம் அமைத்தனர்; ஓராண்டாகியும் திறப்பு விழா நடக்கவில்லை. அரசின் அனுமதி பெறாமல், மாநகராட்சி நிதியைப் பயன் படுத்தி கட்டியதால், சர்ச்சையில் சிக்கியுள்ளது. பயன்படுத்தாததால், பழசாகி வருகிறது.
‘முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார்’ என காத்திருந்து பல மாதங்கள் கடந்தோடி விட்டன. இது வரை அலுவலகம் திறக்க எந்த முயற்சியும் நடக்கவில்லை. இதே போன்று, கட்டடம் கட்டி பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள வணிக வளாகம் பூ மார்க்கெட். ஒரு கோடியே 13 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து, 80 லட்ச ரூபாய்க்கு கட்டி முடிக்கப்பட்ட இந்த மார்க்கெட். ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. அதே கட்டடத்தில், கூடுதலாக 15 லட்ச ரூபாய்க்கு பணிகள் நடப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இதே போன்று, ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது மீன் மார்க்கெட். இன்னும் ‘பார்க்கிங்’ உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடிக்கப்படவில்லை.
இவை எல்லாவற்றையும் விட, மேட்டுப்பாளையம் ரோட்டில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, மாநகராட்சி நிர் வாக குளறுபடியால், ஆண்டுக்கணக்கில் இழுத்து வருகிறது. ‘சிவில்‘ பணிகளை ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வரும் மாநகராட்சி நிர்வாகம், ரோடு போடும் வேலைகளை மட்டும் மின்னல் வேகத்தில் முடித்து விடுவது வியப்பளிக்கிறது. ஒவ்வொரு பணியிலும் காலம் தாழ்த்தி, ‘ரேட்‘டை உயர்த்தி, காசு பார்க்கும் ‘டெக்னிக்‘ ஆக இருக்குமோ என மக்கள் சந்தேகிக்கின்றனர். செம்மொழி மாநாட்டுப் பணிகளை துரிதமாக முடிக்க அக்கறை காட்டும் தமிழக அரசு, பல கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் இந்தப் பணிகளையும் செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக முடிக்க உத்தரவிட வேண்டும்.
30 லட்சமும் முடிஞ்சிருச்சா?: அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ், சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதைத் தடுக்கவும், டூ வீலர்களில் செல்வோரை நனைக்கும் நீர் வழிப்பாதைக்கு மூடி போடவும் 30 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள் துவங்கியது; அந்த ரோடும் மூடப்பட்டது. சில அடி தூரத்துக்கு ‘கான்கிரீட்’ போட்டதுடன் பணி யை முடித்து விட்டனர். நீர் வழிப்பாதைக்கு மூடி கூட போடவில்லை. மாநகராட்சியில் தாறுமாறாக மதிப்பீடு தயாரித்து, லட்சம் லட்சமாய் எங்கு போகிறது என்பதை யாரும் கண் காணிப்பதே இல்லை. -நமது நிருப.