தினமலர் 21.04.2010
புதிய வாக்காளர், பெயர் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.இதுகுறித்து கலெக்டர் சவுண்டையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2009ம் ஆண்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட முதன்மை வாக்காளர் பட்டியல் மற்றும் துணைப் பட்டியல்களில் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், 1.1.2010 அன்று 18வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் மற்றும் துணைப்பட்டியல் 100 சதவீதம் சரிபார்க்கப்பட்டுள்ளது.களப்பணியின் போது களப்பணியாளர்கள் தங்களது பகுதிக்கு வரவில்லை என்று பொதுமக்கள் சிலரிடம் இருந்து வரப்பெற்ற புகார் மனுக்கள் பேரில், களப்பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு முழுமையாக பெறப்பட்ட விவரங்களின்படி விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் குடியிருப்புக்கு சென்று உரிய ஆவணங்களை பெற திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு மாநகராட்சி கமிஷனரால் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையும், புறநகர் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அல்லது தாசில்தாரால் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டையுடன் வரும் களப்பணியாளர்களிடம் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர் முன்னதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்து, போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளதற்கான ஆதாரமாக அடையாள அட்டையின் ஒரு நகல், போட்டோக்களில் ஏதும் மாறுதல் இருந்தால் அதற்கான சரியான போட்டோ ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.
படிவம் 6 ல்1.1.2010 அன்று 18 வயது பூர்த்தியடைந்து புதிய வாக்காளராக சேர்க்கப்பட உள்ள வாக்காளர்களுக்கு உரிய ஆதாரங்களான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வயது ஆகியவற்றிற்கான ஆதார நகலுடன், பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோக்களையும் தயார் செய்து நிலையில் வைத்திருந்து, களப்பணியாளர் கொண்டு வரும் படிவம் 6ல் கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து மேற்காணும் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாக்காளர் மட்டுமே கையொப்பமிட்டு ஒப்புதல் சீட்டினை தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.படிவம் 7ல்அதேபோன்று குறிப்பிட்ட முகவரியில் இருந்து குடிபெயர்ந்து சென்றுவிட்ட வாக்காளர்களின் பெயர்கள் உரிய குடிபெயர்ச்சிக்கான படிவம் தாக்கல் செய்து குடியிருப்பு மாற்றம் குறித்த மாற்றங்களை பதிவு செய்து கொள்ளாதவர்களின் பெயர்கள் ஆதாரங்கள் இல்லாத நிலையில்7 நாட்கள் அவகாசத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஏதுவாக படிவம் 7ன் கீழான அறிவிப்பு குறிப்பிட்ட முகவரியில் ஒட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
முதன்மை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களது போட்டோ மாறியிருந்தால் சரியான போட்டோ தாக்கல் செய்யவும், மற்றும் பிறந்த தேதியில் மாறுதல்கள் ஏதும் இருந்தால், அதற்கான சரியான ஆதாரங்களை தாக்கல் செய்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான அனைத்துப் பணிகளையும் முன்னிட்டு தங்களது குடியிருப்பிற்கு வரும் களப்பணியாளர்களின் முதல் வருகையின் போதே தேவையான அனைத்து ஆவணங்களையும் அனைத்து வாக்காளர்களும் ஒப்படைக்க வேண்டும். 100 சதவிகிதம் சரியாக அமைய திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியல்களை 100 சதவீதம் விடுதல் இன்றியும் பிழையின்றியும் சரி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிக்கு சம்பந்தப்பட்ட அனைத்து வாக்காளர்களும் தங்களது கோரிக்கைகளுக்கான ஆதாரங்களை முழுமையாகவும், உடனடியாகவும், தாக்கல் செய்ய வேண்டும்.களப்பணியின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் தங்களிடமுள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் விவரம், போட்டோ, வயது, இருப்பிட ஆதாரங்கள் ஆகியவற்றை உரிய காலத்தில் தாக்கல் செய்யாத நிலையில், கம்ப்யூட்டரில் பதிவு செய்ய இயலாத காரணத்தினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இயலாத நிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களது குடியிருப்புக்கு வரும் களப்பணியாளர்களிடம் உரிய ஆவணங்களை உடன் தாக்கல் செய்து மாவட்ட வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் சரியாக அமைய அனைத்து நிலையிலான ஒத்துழைப்புகளை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.