தினகரன் 27.05.2010
குடிநீரை காய்ச்சி குடியுங்கள்‘
திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரு வாரங்களாக, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய நோய்கள் பரவுகின்றன. எனவே, குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,” என சுகாதாரத் துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி கூறினார்.கடந்த வாரம், ஆந்திராவை தாக்கிய “லைலா‘ புயலால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருப்பூர், பல்லடம், பொங்கலூர், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இப்புயலால், இரண்டு வாரமாக பருவநிலையில் மாறுதல் நிலவியது. இதனால், கடந்த 15 மற்றும் 23ம் தேதிகளில் திருப்பூரில் லேசான தூறல் மழை பெய்தது.
மாறி வரும் பருவநிலை தொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயலட்சுமி கூறுகையில், தற்போதுள்ள பருவ நிலையால் குழந்தைகள், வயதானவர்களுக்கு சளி, காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் மீது பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும். விளையாடி முடித்த பின் குழந்தைகளுக்கு குளிர்ந்த ஆகாரங்கள் கொடுக்க வேண்டும்.
மதிய வேளை தவிர, காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீரை முடிந்த அளவு காய்ச்சி கொடுக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிப்பதன் மூலமே பலவிதமான நோய் வராமல் தடுக்க முடியும். சில உடல் உபாதைகள், உடலில் வெப்பநிலை மாற்றங்கள், சோர்வு ஏற்படும் போது, டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்,” என்றார்.