தினகரன் 01.06.2010
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை தீவிரம்
பாப்பாரப்பட்டி, ஜூன் 1: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தெருவில் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 26 நாய்களை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் நாய்களுக்கு கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நள்ளிரவில் சுற்றிய தெருநாய்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. இவற்றை பிடித்து கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணியை துப்புரவு ஊழியர்கள் மேற்கொண்டனர். பிடிக்கப்பட்ட 26 தெருநாய்களுக்கு பாப்பாரப்பட்டி கால்நடை மருத்துவமனையில் கருத்தடை அறுவைச்சிகிச்சையை மருத்துவர்கள் செய்தனர். இப்பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கால்நடை மருத்துவ அலுவலர் பூபால் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். கருத்தடை அறுவைச்சிகிச்சைக்கான முகாம் ஏற்பாட்டை பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.