தினகரன் 01.06.2010
பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் திணறும் நாட்டரசன்கோட்டை
காளையார்கோவில் ஜூன் 1: நாட்டரசன்கோட்டையில் பஸ் நிலையம் இடிந்து பயன்பாடின்றி கிடப்பதால் பயணிகள் அவதி தொடர்கிறது. புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காளையார்கோவில் ஒன்றியம் நாட்டரசன்கோட்டையை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் நாட்டரசன்கோட்டை வந்து அதன் பிறகே சிவகங்கை, காளையார்கோவில், காரைக் குடி போன்ற ஊர்களுக்கு செல்கின்றனர்.
நாட்டரசன்கோட்டையில் 2 மேல்நிலைப்பள்ளிகளில் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற் பட்ட கோயில்கள் உள்ளன. கவிச்சக்கரவர்த்தி கம்பர் சமாதியும் இங்கு உள்ளது.
இதனால் நாட்டரசன்கோட்டைக்கு தினமும் வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்குள்ள பஸ் நிலையம் இடிந்து போய் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த பஸ்நிலையம் உள்ள இடம் தனியாருக்கு சொந்தம் என்பதால் பயன்படுத்தாத நிலையிலும் பேரூராட்சியில் இருந்து இடத்திற்கு மாத வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கண்டனிப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரன் கூறுகையில், ‘வளர்ந்து வரும் பெரிய பேரூராட்சி நாட்டரசன்கோட்டை. பயணிகள், பொதுமக்கள் வருகை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் இவற்றை கவனத்திற்கொண்டு புதிய பஸ் நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு ஏழு பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் இரண்டிற்கு மட்டுமே நிழற்குடைகள் உள்ளன. பிற நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் அவதியுறுகின்றனர்‘ என்றார்.
பேரூராட்சி தலைவர் கூறுவது என்ன?
பேரூராட்சி தலைவர் முருகானந்தம் கூறுகையில், ‘நாட்டரசன்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் உடனடியாக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘ என்றார்.