தினமலர் 15.10.2013
துரைப்பாக்கத்தில் கான்கிரீட் சாலை ரூ.1.2 கோடிக்கு மாநகராட்சி ஒப்பந்தம்
சென்னை : துரைப்பாக்கம் ஆனந்தா நகரில், கான்கிரீட் சாலை அமைக்க, 1.2 கோடி ரூபாய்க்கு மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.
சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு உட்பட்ட, 193வது வார்டு துரைப்பாக்கம், ஆனந்தா நகர், விநாயகா நகர் பகுதி. இங்கு ஏராளமான குடியிருப்புக்கள் உள்ள நிலையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
சாலை, மழைநீர் கால்வாய்கள் இல்லாததால், மழைக்காலம் என்றாலே, இந்த பகுதிவாசிகள், சோகத்தில் மூழ்கிவிடுகின்றனர்.
இது குறித்து, மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, மேயர் சைதை துரைசாமி, இந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். இதை அடுத்து, தற்போது விநாயகா நகர், ஆனந்தா நகரில் கான்கிரீட் சாலை அமைக்க மாநகராட்சி முன்வந்துள்ளது. மூன்று சிப்பமாக 1.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஆனந்தா நகர் பிரதான சாலையில், 42.89 லட்சம் ரூபாய்க்கும், ரேடியல் சாலை முதல் ஆனந்தாநகர் ஒன்றாவது தெரு வரை, விநாயகா நகர் பிரதான சாலையில், 43.07 லட்சம் ரூபாய்க்கும், ஆனந்தா நகர் ஒன்றாவது தெரு சந்திப்பு முதல், ஆனந்தா நகர் பிர தான சாலை வரை 34.12 லட்சம் ரூபாய்க்கும் கான் கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளன.
இந்த பணிகளுக்கு வரும் 25ம் தேதி ஒப்பந்தம் திறக்கப்படுகிறது. அடுத்த மாதம் சாலை பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.