தினமலர் 26.04.2010
அரசு கட்டடங்களுக்கு வரி விதிக்க வலியுறுத்தல்
மதுரை: மதுரை மாநகராட்சி வரிவசூலிப்போர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தலைவர் யாகூப்கான் தலைமை வகித்தார்.கூட்டத்தில், மத்திய அரசு மற்றும் ரயில்வே கட்டடங்களுக்கு சொத்து வரிவிதித்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு கட்டடங்களுக்கு அளவு எடுத்து, வரி சீர்திருத்தம் செய்ய வேண்டும். முறையாக வரிசெலுத்துவோருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வரியை ஊக்க தொகைபோல கழிவாக வழங்கலாம். நீண்ட காலம் வரிசெலுத்தாதோர் அசையா சொத்தை கைப்பற்றி ஏலத்திற்கு கொண்டு வரும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும். வரிவிதிப்பு, வரிவசூல், தேர்தல் பணி, வரிவசூலிப்போரை மேற்பார்வை செய்தலுக்கு நகராட்சிகளில் உள்ளது போல, வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். வரிவசூலிப்பு பணிகளுக்கான காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 1500 வரிவிதிப்புக்கு மிகாமல் வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மதுரை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள் பணியிடத்தில் துணை கலெக்டர்களை நியமிக்க வேண்டும். பணிவிதிகளுக்கு முரணாக உதவி வருவாய் அலுவலர் பணிநியமனங்களை ரத்து செய்வதுடன், 1996 முதல் பணிஉயர்வு வழங்கியதால் ஏற்பட்ட நிதிஇழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
