தினமணி 13.08.2012
தெருக்களை தூய்மையாகப் பராமரிக்கும் துப்புரவுப் பணியாளருக்கு பரிசு: ஆணையர்
திருச்சி, ஆக. 12: தெருக்களை தூய்மையாகப் பராமரிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் மூன்று பேருக்கு மாதந்தோறும் பரிசுகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வெளியிட்டார் அவர்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: ஆக. 15 முதல் தெருக்கள் தூய்மையாக இருப்பது குறித்த ஆய்வு தொடங்கும். இதற்காக துப்புரவுப் பணியாளர்களுக்கு தெருக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பாக பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மேயர் அ. ஜெயா தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.அதே நேரத்தில் தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்களும், பணிக்கு வராதவர்களும் கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவர். தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளது குறித்து பொதுமக்கள் செல்போன் எண்களில் தெரிவிக்கலாம். செல்போன் எண்கள் : ஸ்ரீரங்கம் கோட்டம்- 76395 11000, அரியமங்கலம் கோட்டம்- 76395 22000, கோ-அபிஷேகபுரம் கோட்டம் – 76395 44000, பொன்மலைக் கோட்டம்- 76395 33000. இந்த எண்களில் புகார் தெரிவித்து 5 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாநகராட்சி மைய அலுவலக செல்போன் எண்- 76395 66000-ல் புகார் அளிக்கலாம்’ என்றார் தண்டபாணி. கூட்டத்தில், நகர்நல அலுவலர் (பொ) ந. ராஜேசுவரி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர்.