தினமலர் 22.03.2010
பேரூராட்சி செயல் அலுவலர்கள் கூட்டம்
திருவிடைமருதூர்: திருநாகேஸ்வரத்தில் தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் ஆய்வுக்கூட்டம் நடந்தது.தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மண்டல பொறியாளர் (பேரூராட்சிகள்) மனோகர், தஞ்சை உதவி இயக்குனர் அலுவலக எழுத்தர் மனோகரன் மற்றும் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேரூராட்சியிலும் தனி நபர் கழிவறை கட்ட கணக்கெடுத்தல். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களைப் பற்றி கணக்கெடுத்தல், பொது சுகாதாரம் பேணிக்காக்கும் வழிகள், திடக்கழிவு மேலாண்மை, பேரூராட்சிகளின் வருவாய் பெருக்கும் விதத்தில் ஏலத்தொகை யை அதிகரிக்கச் செய்வது.
வரி இல்லா வீடுகளை கண்டறிந்து வரி விதிப்பது. குடிநீர் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.சாலை மற்றும் கட்டிட வளர்ச்சிப்பணிகள், சொத்துவரி, தொழில்வரி போன்ற வரி இனங்களும், குடிநீர் கட்டணம், பஸ் கட்டணம், சாலை ஓரக் கடைகள் வசூல், கடை லைசென்ஸ் மற்றும் உரிமக் கட்டணங்கள் போன்ற வரி இல்லா இனங்கள் ஆகிய பணிகளை மார்ச் 31ம்தேதிக்குள் நிலுவையின்றி செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு வந்த மண்டல உதவி இயக்குனர் பாலசுப்ரமணியத்தை தலைவர் கணபதி வரவேற்றார். செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.