தினமணி 05.05.2010
மாநகராட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்
பெங்களூர், ஏப்.4: பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு கடந்த 28-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு வார்டாக திங்கள்கிழமை எண்ணப்படுகின்றன. இதற்கான முழு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ஒவ்வொரு வார்டாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மாநகராட்சியின் 198 வார்டுகளில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. ஒரு சட்டப்பேரவைத் தொகுதியை அடக்கிய மையத்தில் 6 முதல் 8 வார்டுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வார்டில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி, தோல்வி முடிவை ஊழியர்கள் அறிவித்துவிட்டு அடுத்த வார்டின் வாக்குகளை எண்ணச் செல்வார்கள்.
அதுபோலவே மற்ற தொகுதிகளுக்குட்பட்ட வார்டுகளின் வாக்குகளும் படிப்படியாக எண்ணப்படுகின்றன. காலை 9 மணிக்கே முக்கிய வார்டுகளின் வெற்றி, தோல்வி நிலவரம் தெரிந்துவிடும். பிற்பகல் 12 மணியளவில் பெரும்பாலான வார்டுகளின் முடிவு தெரிந்துவிடும். பிற்பகலுக்கு மேல் சர்வக்ஞா நகர் தொகுதிக்குட்பட்ட வார்டுகளைத் தவிர அனைத்து வார்டுகளின் முடிவும் வெளியாகிவிடும்.
கிழக்குப் பகுதியில் உள்ள சர்வக்ஞா நகர் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளின் வாக்குகள்
பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகே எண்ணப்படுகின்றன. ஏனெனில், அந்த பகுதி வாக்கு எண்ணும் மையத்தில் காலை முதல் பிற்பகல் வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற உள்ளது. எனவே, அந்த சட்டப்பேரவை தொகுதியின் வார்டுகளின் முடிவுகள் மட்டும் வெளியாக தாமதமாகும் என்று கூறப்படுகிறது.