தினமலர் 22.07.2010
வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னை மக்களிடம் கருத்து கேட்க கோர்ட் உத்தரவு
குறிச்சி : திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கோவை மாநகராட்சிக்கு அனுமதி வழங்கும் முன், குறிச்சி மற்றும் வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழுவிடம் கருத்துக்கேட்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 600 டன் குப்பைக்கழிவு, போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டிலுள்ள, மாநகராட்சியின் கழிவுநீர்ப் பண்ணையில் சேகரிக்கப்படுகிறது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப் பட்டு சுற்றுப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். குப்பைக்கழிவுகளிலிருந்து இரும்பு பொருட்களை சேகரிக்க வரும் கும்பல், அடிக்கடி குப்பைக்கு தீ வைப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், பெரிய அளவிலான ஈக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இங்கு, குப்பைக்கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு போராட்டங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. குறிச்சி – வெள்ளலூர் மாசுதடுப்பு கூட்டுக்குழு சார்பில், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை அமல்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது; கட்டுமான பணிகளும் நடக்கின்றன. இதற்கான அனுமதி கோரி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. இதற்கு தடை கோரி, குறிச்சி – வெள்ளலூர் மாசுதடுப்புக் கூட்டுக்குழு செயலாளர் மோகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட், “திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சிக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும்சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கும் முன், கூட்டுக்குழுவுக்கு தகுந்த வாய்ப்பு கொடுத்து அவர்களது கருத்தை கேட்கவேண்டும்; அதன்பின்னரே முடிவு எடுக்கவேண்டும்‘ என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவினால், நீண்டகாலமாக இழுபறியாக உள்ள குப்பை கிடங்கு பிரச்னைக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் எனற நம்பிக்கை, அப்பகுதி மக்களிடம் ஏற்பட் டுள்ளது.