புதுச்சேரியில் பதிவு செய்யாத, கேளிக்கை
வரி செலுத்தாத கேபிள்டிவி நிறுவன இணைப்புகளை துண்டித்து நகராட்சி நடவடிக்கை
எடுத்து வருகிறது.
புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் வீடுகளுக்கு கேபிள் டிவி தொலைக்காட்சி
ஒளிபரப்பு இணைப்பு வழங்கப்பட்டு, பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு
வருகிறது.
இதற்காக ரூ. 200 முதல் ரூ. 500 வரை மாதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு
விதிகள்படி புதுச்சேரி நகராட்சியில் பதிவு செய்யாமலும், கேளிக்கை வரி
செலுத்தாமலும் நீண்டகாலமாக தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பல கோடி ரூபாய் வரி செலுத்தாமல்
நிலுவை உள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் பதிவு
செய்யாமலும் கேளிக்கை வரி செலுத்தாமலும் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் இணைப்பு
துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் சிவக்குமார் அண்மையில் எச்சரிக்கை
அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கேபிள் டிவி கேளிக்கை
வரி செலுத்தாத, பதிவு செய்யாத கேபிள் ஆபரேட்டர்களின் இணைப்புகளை
துண்டிக்கும் பணியை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர்
வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
இதன்படி முதல் கட்டமாக ரூ. 1 கோடியே 2
லட்சம் அளவில் கேளிக்கை வரி நிலுவை வைத்துள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
இணைப்புகளை துண்டித்து, அவர்கள் பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை
மேற்கொண்டனர்.
இந்த வகையில் 6 கேபிள் டிவி நிறுவனங்களின்
இணைப்பு துண்டிக்கப்பட்டு ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து
பதிவு செய்யாத, வரி செலுத்தாத கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.