தினமணி 09.08.2021
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பொதுமக்கள்
அதிகம் கூடும் 9 இடங்களில் மீண்டும் திங்கள்கிழமை முதல் கடைகள்
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில்
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்ட ரங்கநாதன் தெரு
சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை,
புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜாா்
பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி
சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாா் , என்எஸ்சி போஸ் சாலை,
குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் சந்தை பகுதியில்
கல்மண்டபம் சாலை, வாட்டா் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை,
அமைந்தகரை சந்தை பகுதியில் அமைந்தகரை காவல் உதவி மையம் முதல், புல்லா
நிழற்சாலை திருவிக நகா் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் சந்தை
பகுதியில் ஆஞ்சநேயா் சிலை முதல் அம்பேத்கா் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள
வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆக.9-ஆம் தேதி காலை
6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டது.
கொத்தவால் சாவடி சந்தை ஆக.1 முதல் ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்படவில்லை.
அதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில்
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திங்கள்கிழமை (ஆக.9) முதல் கடைகள் செயல்பட
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள்
கூறியதாவது: தடை விதிக்கப்பட்டிருந்த 9 இடங்களில் வியாபாரிகளின் நலன் கருதி
திங்கள்கிழமை முதல் கடைகள் செயல்படலாம். அதே நேரம், கரோனா வழிகாட்டு
நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கடைகளின் ஊழியா்களுக்கும்
தடுப்பூசி செலுத்த விரைவுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம். இந்த
விதிகளைப் பின்பற்றி கடைகள் செயல்படும் என வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள்
உறுதியளித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனா்.