தினமலர் 29.12.2009
அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கட்டிடம்
சேலம்: சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த விழாவில் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 57 மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. சேலம் கோட்டை மகளிர் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். பிறகு அவர், நிருபர்களிடம் கூறும்போது, “”சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 41 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்பட உள்ளன. தவிர, தண்ணீர் வசதியுடன் கூடிய 10 கழிப்பறைகள், இரண்டு ஆழ்துளை கிணறுகள், பள்ளியை சுற்றி 560 மீட்டர் நீளம் கொண்ட சுற்றுச்சுவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை கட்டப்பட உள்ளது.
ஆறு மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிட பணிக்காக பூம்புகார் கைவினை பொருட்கள் அங்காடி தற்காலிகமாக காதி அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது. பூம்புகார் கைவினை பொருட்கள் அங்காடி கட்டுவதற்கு சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் அருகில் 3,700 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார். ஆய்வின் போது, மேயர் ரேகாபிரியதர்ஷினி, டி.ஆர்.ஓ., ராஜரத்தினம், மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.