தினமணி 27.03.2010
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை – ஷூ
சேலம், மார்ச் 26: சேலம் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கான்வென்ட் பள்ளிக் குழந்தைகளுக்கு இணையான சீருடை, ஷூ வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்றும் மேயர் ரேகா பிரியதர்ஷினி அறிவித்தார்.
இதுகுறித்து பட்ஜெட்டில் அவர் மேலும் அறிவித்துள்ளதாவது:
2009-10-ஆம் நிதியாண்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 84 பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் 2010-11 ஆம் நிதியாண்டிலும் முன்னுரிமை வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டுகளைப் போலவே 10, 12-ம் வகுப்புகளில் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்க முன் வருவதில்லை. இந்த குறையைப் போக்கும் வகையில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அழகான சீருடை அறிமுகப்படுத்தப்படும். கான்வென்ட் குழந்தைகளுக்கு இணையாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் விதமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் ஏழை குழந்தைகளுக்கு இலவச சீருடை, ஷூ, குடிநீர் எடுத்துச் செல்லும் பாட்டில் வழங்கப்படும். மேலும் மாநகராட்சி இந்திரா காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.50 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்படும்.
அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே முறையில் பெயர்ப் பலகை, ஒரே நிறத்தில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் ஒரு வகுப்பிóல் ஆங்கில வழிக் கல்வி முறை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
37-வது கோட்டம் காமராஜ் நகர் நடுநிலைப் பள்ளி, 50-வது கோட்டம் மணியனூர் நடுநிலைப் பள்ளி, கொண்டலாம்பட்டி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றை உயர் நிலைப் பள்ளியாகவும், மூணாங்கரடு தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் இன்னர் வீல் அமைப்புடன் மாணவர்களுக்கு ஆளுமைப் பண்பு வளர்க்கும் பயிற்சி, உயர் கல்விக்கு வழிகாட்டும் பயிற்சி ஆகியவை அளிக்கப்படும். .