தினமணி 10.01.2014
13 வரை ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும்
திருவண்ணாமலை நகராட்சி 8 முதல் 23 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி இம்மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது என்று ஆணையாளர் பெ.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சியில் 2-ம் கட்டமாக ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை முதல் தொடங்கி, ஜனவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. நகராட்சியின் 8 மற்றும் 9-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் திருவண்ணாமலை அமராவதி முருகையன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், 10 முதல் 15-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், 16, 17-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் டி.எம்.கார்மேல் பள்ளியில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் 18, 19, 20, 21-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருக்கோவிலூர் சாலையில், கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், 22, 23-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் போத்தராஜா கோயில் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம்.
ஆதார் அடையாள அட்டை என்பது மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படும் மிக முக்கியமான அடையாள அட்டை என்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையாளர் பெ.விஜயலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.