தினகரன் 20.12.2013
விதி மீறி கட்டிய கட்டிடத்திற்கு சீல் மாநகராட்சி அதிரடி
மதுரை, : மதுரையில் தரைத் தளத்திற்கு அனுமதி வாங்கி, அடுக்கு மாடி வீடு கட்டியதால் கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் கட்டிடம் கட்ட தரைதளத்தில் கூரை மாற்றம் செய்ய பாலன் மற்றும் திருமலை செல்வி பெயரில் வரைபட அனுமதியை மாநகராட்சி வழங்கியது.
இந்த இடத்தில் கூரைமாற்றம் செய்ய கட்டிட அனுமதி பெற்ற வரைபடத்திற்கு மாறாக முதல் தளம் மற்றும் 2ம் தளம் கட்டிடம் கட்டப்பட்டது. இதனை அதிகாரிகள் ஆய்வின் போது கண்டுபிடித்தனர். இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் அதன் பின்னரும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதையடுத்து இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க ஆணையாளர் கிரண்குராலா உத்தரவிட்டார்.
நேற்று மாநகராட்சி செயற்பொறியாளர் ராக்கப்பன், உதவி ஆணையாளர் தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி பொறியாளர் ஜெயா ஆகியோர் அங்கு சென்று கட்டுமான பணிகளை நிறுத்தினர். பணியாளர்களை வெளியேற்றி விட்டு கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர்.
