வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவை வைத்திருந்ததால் 2 குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று துண்டித்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் செய்யும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி வசூலில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வரி செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருப்போரின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 42வது வார்டில் கருப்பாத்தாள் என்பவர் பெயரில் உள்ள பனியன் நிறுவனம் கடந்த 2007-08 முதல் குடிநீர் கட்டண நிலுவை தொகையாக ரூ.11 ஆயிரத்து 222 செலுத்தாததால், அங்குள்ள குடிநீர் இணைப்பை மாநகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர். அதே பகுதியில் கந்தசாமி என்பவர் தன் வீட்டு குடிநீர் இணைப்புகான குடிநீர் கட்டணத்தை கடந்த 1990ம் ஆண்டில் இருந்து செலுத்தாமல் ரூ.12 ஆயிரத்து 846 நிலுவையாக வைத்துள்ளார்.
இத்தொகை செலுத்தப்படாததால் அவர் வீட்டு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மாநகராட்சி குடிநீர் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் பணியாளர்கள் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று (8ம் தேதி) 32வது வார்டு பாளையக்காடு பகுதியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மாநகாரட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.